அஞ்ஞான இருளினை அகற்றி ஞான ஒளியினை ஏற்றும் காலமே சிவராத்திரி

பக்தி சிரத்தையுடன் ஆண்டு தோறும் கோவில் வழிபாடு, உபவாசம், நித்திரை துறத்தல் என மிகவும் உணர்ச்சி பூர்வமாகக் கொண்டாடப்படும் சைவத் திரு நாளே சிவராத்திரி ஆகும். விரதம் என்று கூறுகின்ற போது ஏதாவது நோக்கத்தினை அடிப்படையாகக் கொண்டு இறைவனை வேண்டி குறிப்பிட்ட விரத தினங்களில் விரதம் அனுஷ்டிப்பார்கள். இவ்வாறான விரதகாலங்களில் எமக்கு விருப்பமான உணவுகளைத் தவிர்த்தும் மற்றவர்களுடன் பழகுவதனைக் குறைத்தும் சில வாக்குறுதிகளை மேற்கொண்டு விரதம் அனுஷ்டிப்பதே சிவராத்திரி விரத காலத்தின் மகிமையாகும்.
அத்தோடு காலம் காலமாக எமக்கு சில பழக்க வழக்கங்கள் இருக்கலாம். அதாவது அளவிற்கதிகமாக உரையாடுவது, சினிமாத் திரைப்படங்கள் போன்றவற்றில் லயித்திருப்பது போன்ற எமது சில பழக்க வழக்கங்களை இவ்விரத காலத்திலேனும் துறப்பது சிறந்ததாகும். ஏதாவது, ஒன்றினைத் துறக்காது, விரதத்தினை மேற்கொள்ள முடியாது. கண் விழித்தல் என்கின்ற போது இறைவனை மிகுந்த அன்புடன் நினைவு செய்தவாறு சிவராத்திரி தின இரவு நேரத்தில் எந்நேரமும் அவரின் நினைவுடன் இருத்தலைக் குறிப்பிடுகின்றது. வருடம் ஒன்றிற்கு ஒரு நாள் மட்டும் நாம் சிவபெருமானை நினைத்து விழித்திருந்து வணங்கினால் மட்டும் போதாது. அத்துடன், எமது புலன் உறுப்புகளினை எப்போதும் விழிப்புணர்வுடன் வைத்திருக்கவும் வேண்டும். பல பிறவிகளில் செய்த பாவத்தினை ஓரிரு நாட்களில் அழிக்க முடியாதல்லவா?
சிவனின் அவதாரம் இடம்பெறும் காலமானது உலகே அஞ்ஞானம் என்ற இருள் சூழ்ந்து அல்லலுறும் கலிகால நடுநிசி என்பதால் "சிவ இராத்திரி' எனச் சிறப்பிக்கப்படுகின்றது. தன்னைப் பற்றிய அடையாளத்தையே தொலைத்து விட்ட மனிதன் தன் ஆத்ம தந்தை தொடர்பான அறிவையும் சேர்த்தே தொலைத்து விட்டான். அதனாலேயே கட்டுக்கடங்காத அதர்மம் பூமியிலே தலைவிரித்து நிற்கின்றது. அதர்மம் வியாபிக்கின்ற நேரமதில் தர்மத்தினைச் சூது கவ்வும் காலமதில் பரமாத்மா புண்ணிய அவதாரமெடுக்கிறார். மீண்டும் தர்மத்தினைச் செழிக்கச் செய்து மானுடத்திற்குள் குடிபுகுந்துள்ள அரக்க குணங்களை அழித்து புதிய உலகு படைப்பதே சிவபரமாத்மாவின் திவ்ய குறிக்கோளாகும்.
எப்போது அதர்மம் அரசாட்சி செய்து தர்மம் அழிகின்றதோ அப்போது தர்மத்தை நிலைநாட்டி அதர்மத்தை அழிப்பதற்கு நான் அவதாரம் செய்கின்றேன் என பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது. தர்மம் என்றால் என்ன? அதர்ம இருள் சூழ்ந்து மக்கள் இன்னலில் இருக்கின்ற போது அவர்களைக் காப்பாற்ற மீண்டும் இறைவன் அவதாரம் எடுப்பார் என்றும் மக்கள் நம்புகிறார்கள். உலகில் இவ்வாறு குழப்பம் மிகுந்த சூழ்நிலையே இருள் என்று கூறலாம். இதை அறியாமை என்று கூடக் கூறலாம். இவ்வகையான இருளிலிருந்து விடுபடவேண்டும் என்ற விருப்பம் அனைவருக்கும் இருக்கவே செய்கின்றது. மனிதனை இவ்வகையான இருளிலிருந்து விடுவிக்கும் ஆற்றல் இறைவனுக்கேயுள்ளது. அவர் பிறப்பு இறப்பிற்கு அப்பாற்பட்டவராக இருப்பதனால் கர்ம தத்துவத்திற்கும் அப்பாற்பட்டவராகவும் உள்ளார். இதனால், கர்ம வினைகளால் சிக்குண்டு தவிக்கின்ற எம்மைக் காப்பாற்றுகின்ற தகுதி அவருக்கே உள்ளது.
இவ்வாறு காப்பாற்றுகின்ற இறைவன் சிவன் எனப் பெயர் பெறக் காரணம் என்ன?
சிவன் என்றால் மங்களகரமானவர் என்றும் நன்மை பயப்பவர் என்றும் கூறலாம். இவ்வாறு ஜோதி வடிவமாக இருந்தவாறு ஆத்மாக்களாகிய அனைவரையும் காப்பாற்றுகின்றார். நாம் பிறவிகள் தோறும் செய்த பாவங்களை அழிப்பது மட்டுமல்ல, நாம் புண்ணியங்களைச் செய்து எமது வருங்காலப் பிறவிகளுக்குச் சேர்ப்பதற்கும் உதவி செய்கிறார்.
மேலும் இராத்திரி என்ற வாசகம் தினமும் வந்து போய்க் கொண்டிருக்கின்ற இரவைக் குறிப்பதல்ல. மாசி மாதம் கடைசி இரவு நேரம், இந்தக் கடும் இரவுக் காலத்தில் தான் சிவராத்திரி தினம் வருகிறது. இக்காலத்தில் சிவராத்திரி அனுஷ்டிக்கப்படுவதன் காரணம் அஞ்ஞான இருள் முழுமையாகவே சூழ்ந்திருப்பதைக் குறிப்பதாகும். எப்போது சிருஷ்டியில் காமம், கோபம் ஆகிய அஞ்ஞான இருளின் காரணத்தால் மனித வர்க்கம் முழுவதுமே துக்கம், அசாந்தியால் துன்பப்படுகின்றதோ அப்போது தர்மம், அதர்மமாகி ஒழுங்கீனம் எங்கும் தலைவிரித்தாடும். அந்தச் சூழ்நிலையிலே தான் ஞான சூரியனாகிய சிவபரமாத்மா அஞ்ஞான இருள் அகற்றுவதற்காக அவதாரம் செய்து ஞானம் எனும் ஒளிக்கிரகணங்களால் அஞ்ஞானமாகிய இருள் பகலமாக மாறிவிடுகிறது. தீயகுணங்களுடன் காணப்படுகின்ற உலகைத் தூய்மையாக மாற்றுவது விகாரங்கள் நிறைந்த உலகத்தை சத்தியசிவாலயமாக மாற்றுவது, கலியுக துக்கமான உலகை மாற்றி சத்யுக சுகமான உலகைத் தோற்றுவிப்பது, எல்லாம் வல்ல பரமபிதா சிவபரமாத்மாவினுடைய கடமையாகும். இப்போதைய சங்கமயுகத்தில் சிவபரமாத்மா மீண்டும் அவதரித்து அவருடைய கடமையைச் செய்துகொண்டிருக்கிறார்.
சிவராத்திரி தினம், அவ்வளவு புனிதமானது என்பதால் எவ்வாறெல்லாம் அனுஷ்டிக்க வேண்டும் என்பதனை நன்கு புரிந்துகொண்டு அவ்விரதத்தினை அனுஷ்டிக்க வேண்டும். வில்வ இலை அர்ச்சிப்பது, ஆத்மாவானது சாலிகிராம் உருவம் என்பதன் அடையாளமாகும். அதாவது ஆத்மாக்கள் பரமாத்மாவிடம் தன்னை அர்ப்பணிப்பதாகும். இதன் உள்ளார்ந்த பொருள், பரமாத்மா அருளிய ஞானத்தின் வழி நடப்பது என்பது. எருக்கம்பூ தங்களிடமுள்ள விஷத்திற்குச் சமனான விகாரங்களை அர்ப்பணித்து விட்டு, தூய்மையாக வாழ்வதாக உறுதி பூண்டு விரதம் அனுஷ்டிப்பதாகும்.
உடலையும் ஆத்மாவையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இவ்வாறாக உண்மையான பேரானந்த சுகம் அனுபவிக்க வேண்டும். இக்காலத்தில் பரமாத்மா சிவன், ஆத்மாக்கள் அனைவரையும், புனிதமாக்கி பரந்தாமம் அழைத்துச் செல்வதற்கு தகுதியுடையவராக்குகிறார். இந்தச் சமயத்தில்தான், ஆத்மாக்கள் பரமாத்மாவுடன் இனிமையான தொடர்பு கொள்வதோடு, அனுதினமும் வாழ்க்கையானது அவரது அருளினால் நிரம்புவதோடு, துன்பங்கள் அனைத்தும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடுகின்றன. எவ்வளவு தூரம் சிவபரமாத்மாவின் அருளுரைப்படி நடக்கின்றோமோ, அந்தளவிற்குப் பரமாத்மாவுடனான நெருக்கமான தொடர்பை அனுபவிக்கக் கூடியதாக இருக்கும். இப்போது கலியுகம் மகாராத்திரி நேரமாக இருக்கின்றது. இந்தச் சமயத்தில் ஆத்மாவை ஞானத்தின் மூலம் விழிப்படையச் செய்வதுதான் உண்மையான கண்விழிப்பாகும். இந்த கண்விழிப்பின் மூலமாகவே முக்தியும், ஜீவன் முக்தியும் கிடைக்கும்.
அனைத்துத் தெய்வீக குணங்களும் நிறைந்த சிவபெருமானை நாம் உண்கின்றபோதும், உறங்குகின்றபோதும், நடக்கின்றபோதும் நினைக்கவேண்டும். "நடந்தும் இருந்தும் அவன்தாள் நினை' என்று சொல்லிவைத்துள்ளார்கள். இறைவனை எமது தந்தையாக, தாயாக, குருவாக, ஆசிரியராக, குழந்தையாக, நண்பனாக, உற்ற வாழ்க்கைத் துணையாக, சகோதரனாக அவருடன் உறவுமுறையினை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். ஏனெனில் நாம் வாழ்க்கையில் இவ்வாறான உறவுமுறைகளில் வாழ்ந்தே பழக்கப்பட்டுள்ளோம். அதனால், இறைவனுடனும் இவ்வாறான உறவுமுறைகளை ஏற்படுத்தும்போது, அவரை மிக இலகுவாக நினைக்கக்கூடியதாக இருக்கும். அது மிகவும் இலகுவாக எமக்கு முன்னிலையில் உள்ள ஒரு நண்பருடன் உரையாடுவது போன்று, சர்வவல்லமை பொருந்திய சிவபரமாத்மாவினை எமது அன்பென்னும் இழையினால் கட்டிவைக்கின்றபோது எவரும் எமது குடும்ப அங்கத்தவர் ஆகிவிடுவார். இத்தகைய ஓர் விழிப்புணர்வினை, அஞ்ஞான இருள் அகற்றும் சிவராத்திரி தினத்தில் ஞானஒளியினை ஏற்றுவோமாக!

  • Spread The Love
  • Digg This Post
  • Tweet This Post
  • Stumble This Post
  • Submit This Post To Delicious
  • Submit This Post To Reddit
  • Facebook
 
Converted by Ritesh Sanap | Sponsored by Downloaddeck.com Powered by Giant Themes