நாவலர் பெருமான் சைவநெறி தழைத்தேங்கவும், தமிழ்மொழி செழித்து வளரவும் பெரும் பணிகள் ஆற்றியவராவார். அவர் யாழ்ப்பாணம், நல்லூர் கந்தப்பிள்ளை, சிவகாமி அம்மையார் ஆகிய இருவருக்கும் மகனாக 1822 ம் ஆண்டு அவதரித்தார்.
இலங்கையும், இந்தியாவும் அந்நியர் ஆட்சியின் கீழ் அப்போது இருந்தன. சைவமும் தமிழழும் பெரும் ஆபத்துக்களை எதிர்நோக்கிய காலப்பகுதியிலே தோன்றியவர் தாம் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர். பெற்றோர் அவருக்கு இட்ட பெயர் ஆறுமுகம்.
வரலாற்றுக்கு முற்பட்ட சமயமாகவும் ஈழம் வாழ் மக்களின் பெரும்பாலோரது உள்ளத்துள் ஒளி விளக்காய்ச் சுடர்விட்டி லங்குவதுமான சைவ சமயம். அந்நியரது செல்வாக்கு வலியுற்றிருந்த காலகட்டத்தில் சிறிது நலிவுற்றிருந்தது.
இலங்கைக்கு வர்த்தக நோக்கோடு வந்த அந்நிய ஆட் சியாளர் அரசியலாதிக்கத்தைக் கைப்பற்றவும் தற்சமயம் கொள்கையை மக்களிடத்தே பரப்பவும் எண்ணங்கொண்டு கல்வி வழிப்பிரசாரம் செய்யத் தலைப்பட்டனர். அந்நிய வெற்று நாகரிகப் போக்கில் ஈடுபாடு கொண்ட மக்கள் சுய சமய கலாசார வழிகளை மறந்து வாழ்வாராயினர்.
இவ்வாறு சைவ சமயம் நலிவுற்றிருந்த நிலையில் நாவலர் பெருமான் தனது சொல்லாலும் எழுத்தாலும் மக்கள் அகக் கண்களைத் திறந்து அவல நிலையை அவர்களுக்கு உணர்த்தியதோடு சைவமும், தமிழும் மீண்டும் புத்துயிர் பெறுவதற்காகக் தம்மாலியன்ற அத்தனை பணிகளையும் செய்தார்.
அவரின் கல்விப் புலமைப்யையும், நாவன்மையையும், சைவத்தமிழ்ப் பணிகளையும் பாராட்டி திருவாவடுதுறை ஆதீனம் அவருக்கு ‘நாவலர்’ என்ற பட்டத்தை வழங்கியது. சைவம் காத்த நாவலர் பெருமானைச் சைவமக்கள் ஐந்தாம் குரவர் எனப் போற்றுகின்றனர்.
தமது இளமைப் பருவத்திலே நல்லூர் சுப்பிரமணிய உபாத்தியாயர். இருபாலை சேனாதிராய முதலியார், நல்லூர் சரவணமுத்துப் புலவர் என்போரிடம் குருகுல முறைப்படி இலக்கிய இலக்கணங்களையும், சைவ சமய சாத்திரங்களையும் பயின்றார். வட மொழியையும் பயின்றார்.
யாழ்ப்பாணம் வெஸ்லியன் மெதஸ்டித் மிஷன் மத்திய கல்லூரியில் ஆங்கிலக் கல்வியைக் கற்றதுடன் அக்கல்லூரியில் சில காலம் ஆசிரியராகவும் விளங்கினார்.
சைவ சமயத்தை அழியவிடாது பாதுகாக்க நாவலர் பல முயற்சிகள் மேற்கொண்டதுடன் புறச்சமயம் புகாது மக்களை சைவ சமயத்தில் நிலைத்து நிற்கச் செய்ய அரும்பாடுபட்டார். சைவ சமயத்தவர் ஒரு சிலரிடம் காணப்பட்ட தவறான பழக்கவழக்கங்கள், செயல்கள் என்பவற்றை நீக்க முயன்றார்.
சைவப் பாடசாலைகளை நிறுவினார். அவர் நிறுவிய முதலாவது பாடசாலை வண்ணார்பண்ணைச் சைவப் பிரகாச வித்தியாசாலையாகும். அது 1848ம் ஆண்டில் நிறுவப் பெற்றது. தமிழ்நாடு சிதம்பரத்திலும் சைவப் பிரகாச வித்தியாசாலை எனும் பெயரில் பாடசாலையொன்றை நிறுவி அங்கு போதிப்பதற்குச் சைவசமய நூல்களைப் பிரசுரித்தார்.
அதற்காகச் சென்னையிலும், யாழ்ப்பாணத்திலும் அச்சுக் கூடங்களை நிறுவினார். சைவ வினாவிடை, பாலபாடம், பெரிய புராண வசனம், கந்தபுராண வசனம், திருவிளையாடற் புராண வசனம் முதலிய பல நூல்களை எழுதி அச்சிட்டு வெளியிட்டார்.
ஏடுகளில் எழுதப்பட்டிருந்த பல பழந்தமிழ் நூல்களைப் பரிசோதித்து அச்சில் பதிப்பித்தவரும்,அத்துறையில் ஏனையோருக்கு வழிகாட்டியாக விளங்கியவரும் நாவலர் பெருமானே. சைவத் தமிழிப் பணிகளை இடையிறின்றிச் செய்வதற்கு தமக்குக் கிடைத்த உத்தியோகத்தையும் தியாகம் செய்தவர் நாவலர் பெருமான்.
தமது வாழ்நாள் முழுவதும் பிரமச்சாரியாகவே வாழ்ந்தவர். சிவாலயங்களிலும், மடாலயங்களிலும் சைவ சமய உண்மைகளை எடுத்துக் கூறிப் பிரசங்கம் செய்தல், புராணபடலம் செய்தல் என்பவற்றினால் சைவப் பிரசாரம் செய்தவர் நாவலர்.
அத்துடன் துண்டுப் பிரசுரங்களையும் வெளியிட்டு சைவத்தின் உண்மையை விளக்கி சைவ மக்களிடையே புகுந்துள்ள மாசுகளை நீக்கிப் புறச் சமயத்தவரின் தீவிர பிரசாரத்தைத் தடுக்க முற்பட்டவர்.
திருக்கேதீஸ்வரம், கீரிமலைச் சிவன் கோயில் என்பனவற்றின் தொன்மைச் சிறப்புகளை மக்களுக்கு எடுத்துக்கூறி அவற்றைப் புனரமைத்து நித்திய, நைமித்திய பூசைகளுக்கு வழிவகுக்குமாறு சைவமக்களுக்கு விஞ்ஞாபனம் விடுத்தார். இதன் காரணமாக ஆலயங்கள் மீண்டும் அமைக்கப்பெற்றன.
இறைவனின் இயல்புகளும் இறை நெறியின் அறப் பண்புகளும் கற்பிக்கப்படுகின்றன. எங்கள் கலைத் திட்டத்திலே சமயக் கல்விக்கு இன்று முக்கியத்துவம் தரப்படுகின்றது.
இதனை ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே உணர்ந்து எங்கள் நாவலர் பெருமான் நடைமுறைப்படுத்தினார் இலவசக் கல்வி இலவச நூல்கள், தாய்மொழிக் கல்வி என்று நாம் பெருமைப்படும் கல்விச் சாதனைகளை அன்றே நிலை நாட்டினார். கல்வியழகும் தெய்வநெறியும் பொலிந்து விளங்கும் ஒரு சமூகத்தைக் காணத் துடித்தார். அதற்காக உழைத்தார். அவர் வாழ்வின் இலட்சியமே இதுதான்.
வசதியான உத்தியேகத்தைப் பெறும் வாய்ப்பிருந்தும் அவர் அதனை விரும்பவில்லை. இல்வாழ்க்கையிற் புகவில்லை. இவையனைத்துக்கும் காரணம் சைவ சமயத்தையும் அதற்குக் கருவியாகிய கல்வியையும் வளர்த்தல் வேண்டும் என்ற பேராசையேயாகும் என ஒரு சந்தர்ப்பத்திலே தம் உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்துகின்றார் நாவலர்.
நெற்றியிலே நீறு பூசவும், வாழையிலையிலே அமுதுண்ணவும் கூட நம்மவர்கள் அஞ்சியஞ்சி வாழ்ந்து கொண்டிருந்த அவலங்கள் மாறவும், அன்று அந்நியரின் இன்னல் தாங்காது நாட்டை விட்டே வெளியேறிய ஞானப்பிரசாசர் போன்றோரின் பிரார்த்தனைகள் பலிக்கவும் நாவலர் எழுந்தார். ‘எங்கள் கலாசாரம் பிழைத்துக் கொண்டது சிவநெறி தழைத்தது’
முன்னிருந்த எங்கள் சமயாச்சாரியார்கள் தாம் தரிசனம் செய்யப்போன தலங்களிலெல்லாம் பதிகங்கள் அருளிச் செய்தார்கள். இவரோ தாம் போன இடங்களிலெல்லாம் லோகோபகாரமாகச் சைவப் பிரசங்கங்களைச் செய்து வந்தார். சமயப் பிரசங்கங்களுடன் சமயாசாரியாரின் தேவார திருமுறைகளையும் விளங்கச் செய்தார் நாவலர். அந்த நன்நெறிப் பயணத்திலே தான் எத்துணை இடர்கள் ஆதரவில்லாத அந்நியர்கள் இழைத்த இன்னல்கள்.
ஒரு புறம், அடியவர் போன்று வேஷமிட்டு ஏமாற்றும் நம்மவர் செய்கை மறுபுறம், அனைத்தையும் தம் உறுதியான தெளிந்த உள்ளத்தினால் வென்றார் நாவலர். “நிலையில்லாத என் சரீரம் உள்ள போதே என் கருத்து நிறை வேறுமோ, நிறைவேறாதோ எனும் கவலை என்னை இரவு பகலாக வருந்துகிறது.
அக்கருத்து இது. தமிழ்க் கல்வியும், சைவ சமயமும் அபிவிருத்தியாவதற்குக் கருவிகள் முக்கிய ஸ்தலங்கள் தோறும் வித்தியாசாலை தாபித்தலும் சைவப் பிரசாரம் செய்தவித்தலுமாகும். இவற்றின் பொருட்டுக் கிரமமாகக் கற்று வல்ல உபாத்தியாயர்களும், சைவப் பிரசாரகர்களுமே தேவைப்படுவார்கள்.
என்ற நாவலரின் ஏக்கம் தீர இளைய நாவலர்கள் பலர் எழுந்தார்கள். பெருமானின் பணிகளிலே இவர்களும் கலந்தார்கள்.
894 ஆம் ஆண்டிலே நல்லூர்க் கந்தசாமி கோயிலிலே நிகழ்ந்த ஒரு அற்புதக் காட்சியை நாவலர் சரித்திரத்திலே பின்வருமாறு வர்ணிக்கின்றார் கனகரத்தினம் பிள்ளை.
கந்தசாமி கோயிற் திருவிழா சமீபத்தபடியால் தேவாரத் திருக்கூட்டச் சிறப்பையும், தேவாரம் முதலியவை திருவிழாக் காலத்திலே சுவாமிக்குப் பின்னாக ஓதுவதாற் சனங்களுக்குண்டாகும் கடவுட் பக்தியையும் மக்களுக்கு எடுத்துக்காட்ட நினைத்து திருவாடுதுறையினின்று ஓதுவார் சிலரை அழைப்பித்து, திருவிழாக் காலத்திலே அவர்களுக்கும் இங்குள்ள மற்றையச் சைவர்களுக்குந் தெற்கு வீதி மடத்திலே புண்ணியவான்கள் சிலரைக் கொண்டு மகேஸ்சுர பூசை செய்வித்து, சுவாமி வீதியிலே உற்சவங்ககொண்டருளும் போது சுவாமிக்குப் பின்னாக அவர்களைக் கொண்டு தேவாரம் ஓதுவித்துக் கொண்டு வந்தார்.
இவர்கள் தமிழ் தேவமாகிய தேவாரத்தை ஓத அதனைக் கண்ட பிராமணர் தாங்களும் வந்து சுவாமிக்குப் பின்னாக வேதம் ஓதுவாராயினார்கள். நாவலரும் விபூதி உத்துதூறனஞ் செய்து திரிபுண்டரந் தரித்துத் தலையிலே சிரமாலையும் கழுத்திலே கண்டிகையுங் கையிலே பொளத்திரமுந் தரித்து யாவருக்கும் பக்தியை விளைவிக்கத்தக்க சிவ வேடப் பொலிவோடு திருக் கூட்டத் தலைவராய் நின்றார். அத் திருக் கூட்டத்தின் சிறப்பை என்னென்று சொல்வோம்! எதற் கொப்பிடுவோம்!! ஆதியிலே.
சுப்பிரமணியப் பெருமானின்ன அவதாரமாய் விளங்கிய திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார் பதினாராயிரம் திருக்கூட்டத்தோடு தோற்றிய சிறப்புக்கொப்பிடலாம்.
தம் வாழ்நாள் பூராவும், தமிழுக்கும், சைவத்துக்கும் சேவையாற்றி வந்த நாவலர் பெருமான் 1879ம் ஆண்டு கார்த்திகை மாதம் மக நட்சத்திரத்தில் இறைபதம் அடைந்தார்.
சைவத்துக்கும் தமிழுக்கும் சிறந்த தொண்டாற்றிய ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர்
posted on 01:33
in
சைவ சமயம்






