இறைவன் ஏன் இதயத்தில் இருக்கிறான்?

ஆண்டவன் இந்த உலகத்தைச் சுற்றிப் பார்க்க ஒரு நாள் பூமிக்கு வந்தாராம். இறைவனை அடையாளம் கண்டு கொண்ட பக்தர்கள், சுற்றுலாப் பயணிகளைக் காசு கேட்டுத் துரத்தும் உள்ளூர்ப் பிச்சைக்காரர்கள் போல ஆக்கி விட்டார்கள். எனக்கு நிறைய நகை கொடு, பணம் கொடு என்று வகை வகையாகக் கேட்டு ஆண்டவனைத் துரத்த ஆரம்பித்தார்கள். இவர்களைச் சமாளிக்க முடியாமல் மண்டபம், சத்திரம், கிராமம், நகரம் என்று எங்கெங்கோ ஒடிப் பார்த்தார் ஆண்டவன். ஆனால் அவரால் மனிதர்களின் அதைக்கொடு, இதைக்கொடு என்ற பிக்கல் பிடுங்கல்களிலிருந்து தப்பிக்க முடியவில்லை. அவர் கோயிலை நோக்கி ஒடினாராம்.

அங்கேயும் தட்டு ஏந்தியவாறு எதிர்கொண்டது பிச்சைக்காரர்கள் கூட்டம். ஆண்டவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. கடைசியில் அவருக்கு ஒரு யோசனை பளிச்சிட்டது. `மனிதன் தான் உள்நோக்கிச் சிந்திப்பதே இல்லையே.. சுயமதிப்பீடும் செய்துக் கொள்வதில்லையே! தன்னுடைய இதயத்தைத் தான் எந்த மனிதனும் பார்ப்பதே இல்லையே! அதனால் அங்கே ஒளிந்து கொண்டால் யாருமே தன்னைக் கண்டு கொள்ள மாட்டார்கள் என்று எண்ணி மனிதனின் இதயத்திலே போய் ஒளிந்து கொண்டாராம்.

கடவுள் ஏன் நம் இதயத்திலே குடியிருக்கிறார்? என்ற சீரியஸான கேள்விக்கு கிண்டலாகச் சொல்லப்படுகிற கதை இது.‘

‘யாரிடமிருந்து எதை வாங்கலாம்.. பெறலாம் என்ற மனநிலையிலேயே நம்மில் பலர் இருந்து வருகிறோம். அதனால் பிறருக்கு என்ன கொடுக்கலாம் என்றே நினைப்பது இல்லை. தப்பித் தவறி நாம் கோயிலுக்கு ஒரு டியூப் லைட் வாங்கிக் கொடுத்தால், லைட் வெளிச்சமே வராத அளவிற்கு அதன் மேல் நம் பெயரைக் கொட்டை எழுத்துக்களில் எழுதி விடுவோம்.‘

இந்து சா°திரப்படி ஒரு பொருளை தானமாகக் கொடுக்கும் போது ‘இனிமேல் இது என்னுடையது இல்லை‘ என்று சொல்லி விட்டுத் தான் கொடுக்க வேண்டும்.

சம°கிருதத்தில் ‘நம்மா‘ என்றால் என்னுடையது இல்லை என்று பொருள். என்னுடையது இல்லை என்று சொல்லி ஒரு டியூப் லைட்டைக் கோயிலுக்கு தானமாகக் கொடுத்து விட்டு ‘இது என்னுடையது‘ என்று பெருமைப்பட்டுக் கொள்வது எந்த வகையில் தர்மம்?

யோசித்துப் பாருங்கள்.. காலையில் எழுந்தவுடன் பல் விளக்க நாம் பயன்படுத்தும் பற்பசையிலிருந்து இரவு தூங்கும் போது உபயோகப்படுத்தும் கொசுவத்திச் சுருள் வரை கண்ணுக்குத் தெரியாத யார் யாரோ நமக்காகச் செய்து கொடுத்திருக்கும் பொருட்கள் எத்தனை? எத்தனை?
இந்தச் சமூகத்திடமிருந்து இத்தனை பொருட்களை இன்று பெற்றுக் கொண்ட நான், அதற்கு பதிலாக இந்த உலகத்துக்கு என்ன கொடுத்தேன்?‘ என்று யோசித்துப் பார்த்தாலே போதும். நாம் இந்த உலகுக்கு எவ்வளவு கடன் பட்டிருக்கிறோம் என்பது புரியும்!

அற்புதமான இந்த வாழ்க்கையை ஆண்டவன் நமக்குக் கொடுத்திருக்கிறார். இந்த உலகில் இருக்கும் அத்தனை தலை சிறந்த விஞ்ஞானிகளும் ஒன்று கூடி முயற்சி செய்தால் கூட உருவாக்க முடியாத அற்புதமான ஒர் உடலை நமக்கு அவர் அளித்திருக்கிறார்!

நாம் உண்ணும் உணவிலிருந்து உருண்டு கொண்டிருக்கும் இந்தப் பூமிப் பந்து வரை, நமக்காக இறைவன் கொடுத்திருக்கும் பரிசுகள் எத்தனை? இதற்கெல்லாம் நாம் இறைவனுக்குத் தினம் தினம் நன்றி சொல்கிறோமா? நமது வேதத்தில் இருக்கும் ஆரம்பப் பாடங்களில் முக்கியமானது `நன்றியோடு இருக்கக் கற்றுக் கொள்‘ என்பது தான். ‘நமஹா‘ என்ற சம°கிருத வார்த்தைக்கு அர்த்தம் ‘போற்றி‘ என்றாலும் இதை நன்றிப் பெருக்கோடு தான் உச்சரிக்க வேண்டும்!

ஆனால் உதட்டளவில் நாம் பயன்படுத்தும் வார்த்தைகள் என்று கணக்கிலெடுத்தால், அந்த வரிசையில் முதலில் நிற்பது ‘நன்றி‘.

ஒரு முறை நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம் ஒன்றில் ஏதோ கோளாறு ஏற்பட்டு, விமானம் தள்ளாட ஆரம்பித்தது. விமானப் பணிப்பெண், பயணிகளே பயப்படாதீர்கள். விமானத்தில் சின்னக் கோளாறு தான். விமானி சரி செய்து சமாளித்து விடுவார் என்று தைரியம் சொல்கிறார். நேரம் போகப் போக விமானம் கட்டுப்பாடு இல்லாமல் தாறுமாறாகப் பறக்க ஆரம்பிக்கிறது.

அப்போது, `அன்பு நிறைந்த பயணிகளே, நமது திறமை மிக்க விமானி எவ்வளவோ முயற்சி செய்தும், விமானத்தில் இருக்கும் கோளாறை நிவர்த்தி செய்ய முடியவில்லை. அதனால் இன்னும் சில நிமிடத்தில் விமானம் வெடித்துச் சிதறி விடப் போகிறது. Thank you for flying with our Airlines (எங்கள் ஏர்லைன்° விமானத்தில் பயணம் செய்ததற்கு நன்றி)‘ என்று சொல்லி, பயணிகளை அதோகதியாக விட்டுவிட்டு விமானப் பணிப்பெண் பாராசூட்டை மாட்டிக் கொண்டு விமானியோடு வெளியே குதித்து விட்டாளாம்.

நாமும் சில சமயம் சிலரிடம் சொல்லும் நன்றி, பயணிகளுக்கு விமானப் பணிப்பெண் சொன்ன நன்றி மாதிரி வெறும் சம்பிரதாயமாக இருக்கிறது!.

  • Spread The Love
  • Digg This Post
  • Tweet This Post
  • Stumble This Post
  • Submit This Post To Delicious
  • Submit This Post To Reddit
  • Facebook
 
Converted by Ritesh Sanap | Sponsored by Downloaddeck.com Powered by Giant Themes