முருகனாய் பிறந்த முனிவர்

முருகப்பெருமான் சிவமைந்தர் என்பது தெரிந்த விஷயம். ஆனால், முற்பிறவியில் அவர் பிரம்மாவின் மைந்தராக இருந்தவர் என்பது <உங்களுக்குத் தெரியுமா? பிரம்மாவின் மானஸ புத்திரர் சனத்குமாரர். இவர் எல்லாவற்றையும் கடந்த பற்றற்ற ஞானியாகத் திகழ்ந்தார். இவர் என்ன கனவு கண்டாலும் அது பலித்து விடும். என்ன சொன்னாலும் நடந்து விடும். தவறுதலாக வாய் தவறி சொன்னாலும் கூட நடந்து விடும்! அப்படி ஒரு மகாசக்தி அவருக்கு. தேவாசுர யுத்தங்களைப் பற்றி இவர் படிப்பார். அப்போது, அசுரர்களை எப்படியாவது அழிக்க வேண்டும் என்று கற்பனை செய்தபடியே இருப்பார். அதே நினைவுடன் ஒருநாள் தூங்கி விட்டார். மனதில் நினைப்பதே கனவாக வெளிப்படும். தேவாசுர யுத்தத்தில் தான் ஒரு சேனாதிபதியாக நின்று அசுரர்களை வெல்வது போல் கனவு கண்டார். தான் சொல்வதெல்லாம் நடக்கும் என்பதையும், கனவுகள் பலிக்கும் என்பதையும் அவர் பெரிதுபடுத்தியதும் இல்லை, பயன்படுத்தியதும் இல்லை. இந்த சக்தியின் மூலம் ஞானியான அவருக்கு எந்த லாபமும் தேவைப்படவில்லை. "எல்லா உயிர்களும் கடவுளே' என்ற உயர்ந்த கொள்கை மட்டுமே அவருக்குச் சொந்தம். மரம் மட்டைகளைக் கூட கடவுளாகத் தான் பார்ப்பார். இப்படிப்பட்ட ஒரு ஞானியின் சிறப்பை உலகிற்கு தெரியப்படுத்த வேண்டும் என சிவபெருமான் திருவுள்ளம் கொண்டார். அத்துடன் இவர் கண்ட கனவைப் பயன்படுத்தி அசுரர்களையும் அழித்துவிட வேண்டும் என திட்டமிட்டார். பார்வதியுடன் சனத்குமாரர் முன் தோன்றினார். சனத்குமாரர், அவர்களைக் கண்டுகொள்ளாமலே அமர்ந்திருந்தார். சிவனும், பார்வதியும் அவரிடம், ""நாங்கள் நீண்ட நேரமாக காத்திருந்தும் நீ எங்களை அவமதித்து விட்டாயே! லோக மாதா பிதாவை வரவேற்க வேண்டும் என்பது கூட உனக்குத் தெரியாதா?'' என்று கோபப்படுவதுபோல் நடித்தனர். ""ஐயனே! நீரும் என்னைப் பொறுத்த வரை கடவுள், இந்த மரமும் கடவுள். எல்லாரையும் ஒன்று போல பார்க்கிறேன்,'' என்று பதிலளித்தார் சனத்குமாரர். பற்றற்ற அந்த அதிசய ஞானியைப் பார்த்து அவர்களுக்கு மிகுந்த திருப்தி. மீண்டும் அவரைச் சோதிக்க, "பார், உனக்கு சாபம் கொடுக்கப் போகிறேன்,' என மிரட்டினார் சிவன். "சாபம் உடலைத் தான் பாதிக்கும், ஆத்மாவைப் பாதிக்காதே,' என்றார் சனத்குமாரர். பரமேஸ்வரன் அசந்து விட்டார். ""இப்படிப்பட்ட நீ எனக்கு பிள்ளையாகப் பிறக்க வேண்டும்,'' என்று வரம் கேட்டார். சனத்குமாரர் சிவனிடம், ""சரி... உம் விருப்பம் நிறைவேறும். ஆனால், நீர் வரம் கேட்கும் போது, தாயின் சம்பந்தத்துடன் நான் பிறக்க வேண்டும் என சொல்லவில்லை. அந்த மகாசக்தியும் என்னிடம் ஏதும் கேட்கவில்லை. கேட்காதவர்க்கு ஒரு பொருளைக் கொடுக்கக்கூடாது. எனவே, நான் உமக்கு மட்டுமே பிறப்பேன். அதற்குரிய ஏற்பாட்டை நீர் தான் செய்து கொள்ள வேண்டும்,'' என சொல்லிவிட்டார். இதைக்கேட்ட பார்வதி பதறிப் போனாள். "நானே உன்னைப் பெற வேண்டும்' என விரும்பிக் கேட்டாள். அதற்கு சனத்குமாரர் மறுத்து விட்டார். ""ஒரு பெண்ணின் கருவில் உருவாக எனக்கு விருப்பம் இல்லை. ஆனாலும், என்னை உனது மகனாக கொள்ளும் வகையிலான சம்பவம் ஒன்று நடக்கும்,'' என சொல்லி விட்டார். சிவ,பார்வதி கைலாயம் திரும்பினர். அப்போது,பஸ்மாசுரன் என்ற அசுரன் வந்தான். "யார் தலையில் கை வைத்தாலும் அவன் அழிந்து போகவேண்டும்' என்ற வரத்தை, சிவபெருமானிடம் பெற்றவன் அவன். அதைச் சோதித்துப் பார்க்க சிவனுடைய தலை மீதே கை வைக்க வந்தான். சிவன் மறைந்து விட்டார். சிவனின் பிரிவைத்தாளாத பார்வதி அப்படியே தண்ணீராய் உருகி ஒரு குளமாகி விட்டாள். அதுவே "சரவணப் பொய்கை' ஆயிற்று. சிவபெருமான், நெற்றியில் இருந்து பொறிகளை அனுப்ப, அவை சரவணப் பொய்கையில் விழுந்து, தாயின் ஸ்பரிசம் பெற்றன. இப்படி புத்திசாலித்தனமாக தன் மகனைத் தாங்கிக் கொண்டாள் பார்வதி. தான் கனவில் கண்டது போலவே, முருகனாகப் பிறந்த சனத்குமாரர் அசுரர்களை அழித்து வெற்றிக் கொடி நாட்டினார். இந்தக்கதை "திரிபுரா ரகஸ்யம்' என்ற கிரந்தத்தில், மஹாத்மிய காண்டம் 37வது அத்தியாயத்தில் சொல்லப்பட்டுள்ளது. தினமலர்

  • Spread The Love
  • Digg This Post
  • Tweet This Post
  • Stumble This Post
  • Submit This Post To Delicious
  • Submit This Post To Reddit
  • Facebook
 
Converted by Ritesh Sanap | Sponsored by Downloaddeck.com Powered by Giant Themes