மார்கழி மாதம் முடியப்போகிறது. இதில் திருப்பாவை பற்றிநாம் அவசியம் தெரிந்து கொள்வோமா. திருப்பாவை என்றால் பொம்மை என்பதாகும். ஆண்டாள் மார்கழி மாதத்தில் இடைச்சிறுமியர்களை அழைத்துக்கொண்டு கிருஷ்ணகானங்களை பாடியபடி நீரில் மூழ்கி மணலினால் ஒரு உருவம் அமைத்து, தேவி! நான் நோன்பு நோற்கப் போகிறேன். அதில் எந்த இடையூறும் ஏற்படாதவாறு காத்தருள வேண்டும். எனக்கு அந்த பெருமாளே கணவனாக அமைய வரம் தர வேண்டும் என வேண்டிக்கொண்டாள். இது ஸ்ரீபாகவதத்தில் கூறப்பட்டுள்ளது.
மார்கழி முப்பது நாளும் பால்,வெண்ணை,தித்திப்பு இவற்றையெல்லாம் தவிர்த்து வெறும் சாதத்தை மட்டும் உண்டு நோன்பு இருக்கிறாள். இவள் நோன்பு இருக்கும் போது எப்படியெல்லாம் நோன்பு இருக்க வேண்டும் என்று கூறுவதோடு, சமுதாய நலனுக்காக மழைபொழிய ஸ்ரீரங்கனை வேண்டினால் பாவங்கள் எல்லாம் தூசாகி விடும் என்ற நன்மைகளைக்கூறுகிறாள்.
பின் உரிமையுடன் கோவிந்தா நோன்பு இருந்து விட்டேன், எனக்கும் என் தோழிகளுக்கும் ஆடை, அலங்காரப்பொருட்கள் கிடைக்க வழி செய் என வேண்டுகிறாள். நாம் செய்ய வேண்டிய கடமைகளை செய்து விட்டு உரிமையுடன் பரமனிடம் கேட்கலாம் என்பதே ஆண்டாளின் மார்கழி விரத தத்துவமாகும். அத்துடன் மார்கழி விரத நோக்கமானது ஜீவாத்மாவாகிய நாம் பரமாத்மாவை அடைவதை குறிப்பதேயாகும். -வெ.புனிதா வெள்ளை
கூப்பிட்டு வரம் தரும் சுயம்பு விநாயகர்: கோவை நகரின் மத்தியில் உள்ள இடையர் வீதியின் நடுவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ள விநாயகரை 'கூப்பிடு விநாயகர்' என அழைத்து வழிபடுகிறார்கள். இங்குள்ள சுயம்பு விநாயகரை சுமார் 250 ஆண்டுகளுக்கு முன் குருபதாசே கவுடர் பிரதிஷ்டை செய்துள்ளார். சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பே சுயம்பு மூர்த்திக்கும் மூலவருக்கும் ஒரே தகட்டினால் ஆன வெள்ளி கவசம் சார்த்தப்பட்டது. இதனாலேயே இவரை பக்தர்கள் 'வெள்ளி விநாயகர்' என்று வணங்கி வருகின்றனர். இத்தலத்தில் ஐப்பசி பவுர்ணமி தினத்தில் நடைபெறும் அன்னபிஷேகம் மிகவும் சிறப்பானது. இப்பகுதி மக்களை கூப்பிட்டு வரம் தருவதாலும் மனமுருகி வேண்டும் காரியங்கள் உடனுக்குடன் நிறைவேறுவதாலும் நாளுக்கு நாள் பக்தர்கள் பெருகிவருகின்றனர். -வி.பி.ஆலாலசுந்தரம்.
சவுந்தர்ய லஹரி (15)
சரஜ் ஜ்யோத்ஸ்னா சுத்தாம்
சசியுத ஜடாஜுட மகுடாம்
வரத்ராஸ த்ராண ஸ்படிக
குடிகா புஸ்தக கராம்!
ஸக்ருந்ந த்வா நத்வா கதமிவ
ஸதாம் ஸந்நிதததே
மது க்ஷீர திராக்ஷ� மதுரிம
துரிணா பணிதய:
பொருள்: பவுர்ணமி கால நிலவைப் போன்ற அழகிய வடிவத்தை உடையவளும், தலையில் பிறைச்சந்திரனுடன் ஜடாமுடியும், கிரீடமும் அணிந்தவளும், வரத அபயமுத்திரை, ஸ்படிகமாலை, புத்தகம் ஆகியவற்றை தனது கைகளில் ஏந்தியவளுமான உன்னை ஒருமுறை வணங்கினால் போதும். பாலும், தேனும், திராட்சை சாறும் கலந்ததுபோன்ற இனிய சொற்களை தந்தருள்வாய் என்பதில் சந்தேகமே இல்லை.
கல்வியில் உயர்வும், வெற்றியும், சிறந்த கவிதைகள் எழுதவும் விரும்புவோர் இந்த சுலோகத்தை தொடர்ந்து சொல்லி வர வேண்டும்.
கால்நடைகளின் நோய் தீர்க்கும் கோயில்: அளப்பன்கோடு என்ற கிராமம் கன்னியாகுமரி மாவட்டம் அருகில் உள்ளது. இங்குள்ள ஈஸ்வரகால பூதத்தான் கோயிலில் ஐயப்பன் சந்நிதி உள்ளது. இந்த கிராமத்தின் சுற்றுப்பகுதிகளில் ஆடு, மாடுகள் கன்று ஈன்றால் அவற்றிலருந்து சுரக்கும் முதல் பாலை இங்கு கொண்டுவந்து ஐயப்பனுக்கும் பூதத்தானுக்கும் அபிஷேகம் செய்கிறார்கள். இவ்வாறு செய்வதன் மூலம் கால்நடைகளுக்கும் நோய் வராது என்பது நம்பிக்கை.
மந்திரம்-எந்திரம்-தந்திரம்: 'மனனம் செய்பவனை திராயதே' - அதாவது உயர் நிலைக்கு அழைத்து செல்வது மந்திரமாகும். ஒவ்வொரு தேவதைக்கும் ஒரு மந்திரம் உள்ளது. அது ஜபம் செய்யச்செய்ய சப்த அலைகளின் வலிமையால் ஆன்மிக முன்னேற்றம் ஏற்படுகிறது. இதனால் அந்த தெய்வத்தின் தரிசனமும் கிடைக்கிறது.
இதேபோல ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒரு சக்கரம் உண்டு. அந்த தெய்வத்தின் அடிப்படையில் சதுரம், முக்கோணம், வட்டம், பத்மம் முதலிய வடிவங்களால் ஆன வரைபடங்கள் யந்திரம் எனப்படும். யோக முறைப்படி மனித உடலில் உள்ள முக்கியமான ஆன்மிக மையங்களை குறிப்பன இந்த எந்திரங்கள்.
ஒவ்வொரு தெய்வ வழிபாட்டிற்கும் சில குறிப்பிட்ட முத்திரைகள் அடையாளச் செய்கைகள் பூஜை முறைகளால் வகுக்கப்பட்டுள்ளன. இவை முழு மன ஒருமைப்பாட்டிற்கு உதவும். இவையே தந்திரங்கள் எனப்படும்.
மந்திரம் - எந்திரம் - தந்திரம் இவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.
கோபுர தரிசனம் கோடி புண்ணியம்: தான்தோன்றிமடம் என்று அழைக்கப்படும் ஆக்கூரில் கோயில் கொண்டுள்ள இறைவனது பெயர் 'ஆயிரத்திலொருவர்' என்பதாகும். சோழ அரசன் 1000 பேருக்கு உணவளிக்க எண்ணியிருந்தார். 999 பேர் மட்டுமே வருவதைக்கண்ட சோழ மன்னன் வருந்தினான். வனின் குறை தீர்க்க இறைவனே ஒருவரானார். இறைவன் இத்தலத்தில் இள வாலிபனாகக் காட்சியளிக்கிறார். கையில் உள்ள கோலின் இருபுறமும் கிளிகள் உள்ளன.
கோபுரம் 'ஸ்தூல லிங்கம்' என்று சொல்லப்படும். அதாவது அனைவரும் தரிசிக்குமாறு வெளிப்படையாக அமைந்த இறைவனின் அடையாளம். அதனால் தான் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என கூறப்படுகிறது.
புத்திக்கோளாறு, மனக்கலக்கம் உடையவர்கள், சோளிங்கபுரம் - யோகநரசிம்மர், குணசீலம் - பெருமாள், சோட்டாணிக்கரை - பகவதி அம்மனை தரிசித்தால் குணமடையலாம்.







