ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் விஷ்ணு ஆலய மஹோற்சவம்

சிவபூமி எனத் திருமூலரால் போற்றப்பட்ட பெருமைக்குரியது இலங்கை. இவ் இலங்கைத் திருநாட்டின் இருதயம் போன்று இலங்குவது யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வடமராட்சிப் பகுதியாகும். இவ் வட மராட்சியிலே எழில் பூத்த வல்லிபுர மண்ணிலே உயிர் மூச்சாய் விளங்குவது வரலாற்றுச் சிறப்புமிக்க வல்லிபுர ஆழ்வார் விஷ்ணு ஆலயமாகும். இவ்வாலயத்தில் உற்சவ காலங்களில் யாழ்ப்பாணத்தில் பல பகுதிகளிலிருந்து பக்தர்கள் வந்து பக்திப் பரவசத்துடன் கண்ணனின் அடி தொழுது அருள்பெற்று நிற்பது கண்கொள்ளாக்காட்சியாகும்.மேலும்.உலகத்திலே தர்மம் அழிந்து அதர்மம் ஓங்குகின்ற காலத்தில் கிருஷ்ண பகவான் அவதாரம் எடுத்து பூலோகத்திற்கு வருகிறார். அதர்மத்தை அழித்து, தர்மத்தை நிலை நிறுத்துவதற்காக நான் காலம் காலம் அவதரிப்பேன் என்று கீதையிலே கிருஷ்ண பரமாத்மா அர்ச்சுனனுக்கு வலியுறுத்திக் கூறியுள்ளார்.இத்துடன் நீண்டு உயர்ந்த பெருமைக்குரியவர் திருமால் காண்பாரைத் தன் அழகால் வசீகரிக்கும் அனந்த கோடி சூரிய பிரகாசனாய் ஒளிர்பவர், அத்திருமாலின் நெடிதுயர்ந்த தோற்றத்தினை ஆழ்வார்களும் பிற அடியார்களும் அனுபவித்துப்பாடியுள்ளனர். ஓங்கி உலகளந்த உத்தமன் என்று பாவை பாடிய ஆண்டாள் அவர்கள் திருமாலின் நெடிய தோற்றத்தினை சிறப்பித்துள்ளார். ஆதிமூலமே என்றழைத்த யானைக்கும், கண்ணாவோ / மணிவண்ணாவோ என அழைத்துக் கதறிய பாஞ்சாலிக்கும் விரைந்து வந்து அருள்புரிந்த வள்ளல் அவன். திருமாலின் திரு அவதாரங்களில் ஒன்பதாவது அவதாரமாகக் கொள்ளப்படுவது கிருஷ்ண அவதாரமாகும்.மேலும் கம்சன், சிசுபாலன் போன்ற கொடியவர்களை அழித்து பூபாரம் தீர்த்து தேவர்களின் குறையை நீக்கியவரும் திருமாலே. வல்லிபுர ஆழ்வார் விஷ்ணு ஆலயத்தில் தேர்த்திருவிழா, சமுத்திரத்தீர்த்தம், கேணித்தீர்த்தம் போன்றவை மிகவும் சிறப்பாக நடைபெறும் விழாக்களாகும். மேலும், இத்தேர்த்திருவிழா நமக்கு விளக்குவது என்னவெனில் இந்த உடலே ரதம், அதில் வீற்றிருப்பவனே ஆத்மா, புத்திதான் சாரதி, மனம்தான் கடிவாளம், இந்திரியங்கள் குதிரைகள், விஷயங்களே அவைகள் செல்லுமிடமாம்.தேர்த்திருவிழா காண்பது ஒரு பேரின்பம். இவ்விழாவின்போது மக்கள் வெள்ளம் கரை புரண்டோடும், எல்லோரும் வடம் பிடித்து தேரை இழுத்து மகிழ்ந்து கண்ணனின் திருவருளில் திளைப்பார்கள். இத்துடன் சைவமும், தமிழும் தழைத்தோங்கவும் மக்கள் இன்றைய காலகட்டத்தில் சொல்லொணாத் துயர், துன்பங்களிலிருந்து மீளவும் நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் பிறவும் வல்லிபுர ஆழ்வார் திருத்தலத்தில் வீற்றிருக்கின்ற கண்ணனை வணங்கித் திருவருள் பெறுவோமாக. ""கலாபூஷணம்' செல்வத்தம்பி மாணிக்கவாசகர்

  • Spread The Love
  • Digg This Post
  • Tweet This Post
  • Stumble This Post
  • Submit This Post To Delicious
  • Submit This Post To Reddit
  • Facebook
 
Converted by Ritesh Sanap | Sponsored by Downloaddeck.com Powered by Giant Themes