தீபாவளி வந்த காரணம்

* இறைவன் மகாவிஷ்ணு பத்து அவதாரங்கள் எடுக்க வேண்டி நேர்ந்தது. இதனைத் தசாவதாரம் என்பார்கள். * முதலாவது அவதாரம் மச்சம் எனப்படும் மீனின் அவதாரம். இரண்டாவது அவதாரம் கூர்மம் எனப்படும் ஆமை அவதாரம். மூன்றாவது அவதாரம் வராகம் எனப்படும் பன்றி அவதாரம். * இவரை வராக மூர்த்தி என்றும் பூவராகன் என்றும் அழைத்தனர். அப்போது தன்னைக் காப்பாற்றிய இறைவனான திருமாலின் அருள் பெருக்கை வியந்து அவர் மேல் காதலானாள் பூமாதேவி. வராகரும் பூமாதேவியின் மேல் மையல் கொண்டார். எனவே, இருவரும் மணந்து கொண்டனர். * அவர்களுக்கு அற்புதமான ஒரு குழந்தை பிறந்தது. அவனுடைய பெயர் நரகன். அசுரத் தன்மையுடன் கூடியவனாக நரகன் விளங்கினான். எனவே, பிற உயிர்களைக் கொடுமையிலும் கொடுமை செய்து வந்தான். * நாளாக, ஆக அவனுடைய கொடுமைகள் எல்லை மீறிப் போயின. அந்த நேரத்தில் திருமாலின் எட்டாவது அவதாரமாக கிருஷ்ணர் தோன்றி இருந்தார். * நரகாசுரனிடம் தாங்கள் படும் கொடுமைகள் குறித்து அனைவரும் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவிடம் விரிவாக எடுத்துரைத்தனர். அவர்களைத் தாம் காப்பாற்றுவதாக வாக்களித்தார் திருமாலான கிருஷ்ணர். * அந்த நாளில் சத்ராஜித்து என்ற மன்னனுடைய மகளாகப் பூமாதேவி தோன்றி இருந்தாள். அவளுடைய பெயர் சத்யபாமா. * சத்ராஜித்துவிடம் அற்புதமான ஒரு மணி இருந்தது. அது நரியனால் தரப்பட்ட மணி. அதன் பெயர் "ஸ்யமந்தகம்.' ஒருமுறை சத்ராஜித்துவிடம் அந்த மணியைத் தனக்குத் தருமாறு கேட்டார் கிருஷ்ணர். அவன் மறுத்து விட்டான். * பின்னொரு நாளில் சத்ராஜித்தின் தம்பி அந்த மணியை கழுத்தில் அணிந்து கொண்டு வேட்டைக்கு சென்றபோது அவனை ஒரு சிங்கம் கொன்று விட்டது. அந்த சிங்கத்தை ராம பக்தரான ஜாம்பவான் கொன்று ஸ்யமந்தக மணியைக் கைப்பற்றி, தன் புத்திரி ஜாம்பவதிக்குப் பரிசாகத் தந்திருந்தார். * தன் தம்பியைத் தேடி காணாத சத்ராஜித்து அவனைத் தேடி காட்டிற்கு சென்ற போது அவனது இறந்த உடலை மட்டுமே காண முடிந்தது. * எனவே, மணியின் மேல் ஆசை கொண்ட கிருஷ்ணரே தன் தம்பியைக் கொன்றார் என்று பழி சுமத்தினான் மன்னன். * கிருஷ்ணர் தம் பழியைப் போக்கிக் கொள்ள மணியைத் தேடிக் காட்டிற்குள் புகுந்து ஜாம்பவதியைக் கண்டார். ஜாம்பவானும் கிருஷ்ணரும் போராடிய பின்னர் கிருஷ்ணரே ராமர். ராமரே கிருஷ்ணர் என்று உணரப்பட்டு ஜாம்பவதியுடன், அந்த மணியையும் ஒப்படைத்தார் ஜாம்பவான். ஜாம்பவதியைத் திருமணம் செய்து கொண்ட கிருஷ்ணர் ஜாம்பவதியுடன் சத்ராஜித் நாடு சென்று நடந்த விவரங்களைக் கூறி மணியை அவனிடம் ஒப்படைத்தார். * கிருஷ்ணரின் நேர்மையை மெச்சிய மன்னன் தன் புதல்வி சத்யபாமாவை அவருக்கு திருமணம் செய்து வைத்தான். * சத்யபாமா தேரோட்டுவதில் கெட்டிக்காரி. எனவே, நரகாசுரனுடன் போரிடும் போது தனக்கு அற்புதமான ரத சாரதி வேண்டும் என்று கருதிய கிருஷ்ணர் சத்யபாமாவையே ரத சாரதியாக்கி நரகன் மேல் போர் தொடுத்தார். * இதற்கு இன்னொரு காரணம் இருந்தது. தன்னுடைய தாயாரின் கையினாலேயே தன் மரணம் நிகழவேண்டும் என்று நரகன் வரம் கேட்டிருந்தான். எனவே, அவளையும் அழைத்துச் சென்றார் கிருஷ்ணர். * நரகனுக்கும், கிருஷ்ணருக்கும் கடும் போர் நடைபெற்றது. நரகனின் கூரிய அம்பு ஒன்றினால் மயக்கமடைந்தார் கிருஷ்ணர். தன் கணவர் தாக்கப்பட்டது கண்டு வெகுண்ட சத்யபாமா, கணவருக்கு பதில் தானே நரகனுடன் போரிட்டாள். * போரில் நரகன் படுகாயமடைந்து கீழே விழுந்தான். அவன் உயிர் ஊசலாடியது. இந்த நேரத்தில், வந்திருப்பவள் தன் தாய் என்பதை உணர்ந்து கொண்ட நரகன், தன் பெற்றோரைக் கையெடுத்து வணங்கினான். * கிருஷ்ணரும், சத்யபாமாவும் அவனருகே கருணை பொழிய வந்து நின்றனர். * ""நீங்கள் இருவரும் என் தாய், தந்தையர் என்பதை நான் உணர்ந்தேன். தெரியாமல் நான் அரிய, பெரிய பாவங்களைச் செய்து விட்டேன். என்னை மன்னித்தருள வேண்டுகிறேன்!'' என்று வேண்டினான் நரகன். * ""குழந்தாய், உனக்கு வேண்டிய வரம் யாது?'' என்று கேட்டார் கிருஷ்ணர். * ""நான் கொடியவன் ஆகையால் நான் உயிர் விடவே விரும்புகிறேன். நான் உயிர் விடும் இந்நாளை மக்கள் எல்லாரும் விரும்பிக் கொண்டாடி மகிழ்வர். அக்கொண்டாட்டம் இன்றுடன் நின்று விடக் கூடாது. ஒவ்வொர் ஆண்டும் இந்த நாளைக் கொண்டாடும்படி தாங்கள் அருளவேண்டும்'' என்று கேட்டுக் கொண்டான் நரகன். * கிருஷ்ணர் புன்னகை புரிந்தவராக, அன்பனே, இன்று சதுர்த்தசி திதி. உன் நினைவாக இன்று முதல் "நரக சதுர்த்தி' என்று பெயர் உண்டாகட்டும். * இந்த விடியற்காலை வேளையில், எண்ணெய் தேய்த்துக் குளிப்பவர்கள் கங்கையில் குளித்த புண்ணியத்தை அடையட்டும்! * மக்கள் புதிய ஆடை, அணிகளை அணிந்து என்னை முறைப்படி பூஜைகள் செய்யட்டும். அப்படிச் செய்பவர்களுக்கு கிருஷ்ணனாகிய என்னுடைய அருளும், சத்யபாமாவின் அருளும் கண்டிப்பாக என்றென்றும் உண்டு. * "இந்த உலகம் உள்ள வரை மக்கள் உன்னை நினைத்து இதனை பெரியதொரு பண்டிகையாகக் கொண்டாடுவார்களாக' என்று அருள்புரிந்தார். * கிருஷ்ணரின் இந்த வார்த்தைகளைக் கேட்டவுடன் நரகாசுரன் அமைதி அடைந்தான். அவன் உயிர் பிரிந்தது. இது தான் நாம் தீபாவளி கொண்டாடுவதன் பின்னணி! **வெப்டைமில் இருந்து

  • Spread The Love
  • Digg This Post
  • Tweet This Post
  • Stumble This Post
  • Submit This Post To Delicious
  • Submit This Post To Reddit
  • Facebook
 
Converted by Ritesh Sanap | Sponsored by Downloaddeck.com Powered by Giant Themes